அதிபத்தர்
நாள்தோறும் வலையில் விழும் முதல் மீனை நமச்சிவாய என மந்திரம் ஓதி கடலிலேயே விட்டு விடுவதை விரதமாகக் கொண்டிருந்தார் வறுமையில் வாழ்ந்து வந்த போதும் நவரத்தினமிழைத்த பொன் மீன் முதல் மீனாக கிடைத்த போதும் தாம் வைத்துக் கொள்ளாமல் சிவார்ப்பணம் செய்தவர்
அப்பூதியடிகள்
இவர் திருநாவக்கரசர் மீது அன்பு பூண்டு திருநாவுக்கரசர் பெயரால் மடங்கள், சத்திரங்கள், தர்மசாலைகள் அமைத்திருந்தார். இதனையறிந்த திருநாவுக்கரசர் அவரது இல்லம் சென்றார். மகிழ்ச்சியடைந்த அப்பூதியடிகள் அவருக்கு விருந்து படைக்கலானார். வாழை இலை பறிக்கச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து விட அப்பெரும்துன்பத்தையம் மறைத்து விருந்தோம்பலை தொடர்ந்தார். இதனை உணர்ந்த திருநாவுக்கரசர் தி்ங்களூர்ப்பெருமானை தொழுது மகனை உயிர்ப்பிக்க திருப்பதிகம் பாடினார். ஈசனருளால் அப்பூதியடிகளின் மகன் உயிர்ப்பெற்று எழுந்தான். அப்பூதியடிகளின் குடும்பம் அளவிலா ஆனந்தமடைந்தது. பல்லாண்டு காலம் திருத்தொண்டு புரிந்து இறுதியில் சிவபதம் அடைந்தார்.
அமர்நீதி நாயனார்
சிவனடியார் வேடம் பூண்டு தம்முடைய கோவணத்தை பாதுகாத்து வைத்திருந்து பின்னர் திருப்பிக் கொடுக்குமாறு நாயனார் அவர்களிடம் கொடுத்து சென்றார் பின்னர் திரும்பி வந்த சிவபெருமான் தன் கோவணத்தை திரும்பித் தருமாறு கேட்டார். ஆனால் கோவணம் காணாமல் மறைந்து போனது. கோவணத்துக்கு ஈடாக தராசில் பல துணிமணிகள் ஆபரணங்கள் வைத்த போதும் தராசு நேர் நிற்கவில்லை இறுதியாக தானும் தமது மனைவி மக்களும் தராசில் நின்று சிவனடியார்க்கு அர்ப்பணமாயினர். இவருக்கு பக்திக்கு இணங்கிய ஈசன் காட்சியளித்து முக்தியருளினார்.
அரிவட்டாயர்
நாள் தோறும் சிவபெருமானுக்கு செந்நெல், செங்கீரை, மாவடு ஆகியவற்றை நைவேத்தியமாக அளிக்கும் திருத்தொண்டினை செய்து வந்தார். ஒரு நாள் நைவேத்தியத்திற்காக கோயில் நோக்கி செல்லும் போது பசி மயக்கத்தில் தரையில் சாய்ந்தார். அதனால் நைவேத்தியப் பொருட்கள் தரையில் சிந்தியது, திருத்தொண்டு தடைப்பட்டுப் போனதை எண்ணி வருந்தி தம்முடைய அறுவடை செய்யும் அரிவாளால் வெட்டிக் கொள்ளலானார். சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டார்.
ஆனாய நாயனார்
பசுமேய்க்கும் போது ஐந்தெழுத்தை புல்லாங்குழலில் வாசித்து சிவதரிசனம் கண்டவர்.
இசைஞானியார்
சுந்தர மூர்த்தி சுவாமிகளை பிள்ளையாகப் பெற்று பதினாறு வயதிலேயே தமிழ் நெறிக்கும் தமிழ் மொழிக்கும் தமிழிசைக்கும் சமுதாயத்திற்கும் தொண்டு செய்ய அர்ப்பணித்தவர்.
இடங்கழி நாயனார்
அறநெறியில் ஆட்சி புரிந்து நாடெங்கும் சைவத்திருப்பணி மேற்கொண்டார். அடியார் ஒருவர் நாள்தோறும் திருத்தொண்டர்களுக்கு அன்னதானம் செய்வதை விரதமாக நடத்தி வந்தார். வறுமையின் காரணமாக திருத்தொண்டை நிறைவேற்ற அரசு நெற்கிடங்கிலே புகுந்து நெல்லை எடுத்துச் செல்லலானார். பின் காவலர்களால் பிடிக்கப்பட்டு அரசன் முன் நிறுத்தப்பட்டார். இடங்கழி மன்னர், அடியாரின் திருப்பணியை உணர்ந்து அவருக்கு மேலும் பொருளும் நெல்லும் தந்தருளினார். பின் அடியார்க்கு வேண்டும் பொருளை எடுத்துச் செல்லுமாறு அறிவித்தார். பல்லாண்டு காலம் அடியார் தொண்டு புரிந்து சிவலோகம் சேர்ந்து பிறவாநிலை அடைந்தார்.
இயற்பகை நாயனார்
சிவனடியார்க்கு கேட்பதையெல்லாம் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் திருத்தொண்டு செய்து வந்தார். சிவனடியார் வேடத்தில் சென்ற சிவபெருமான், இயற்பகை நாயனாரிடம் அவரது மனைவியை தானமாகக் கேட்டார். நாயனாரும் மகிழ்ச்சியடன் சிவனடியார்க்கு தமது மனைவியை தானமளித்தார். சிவபெருமான் திருக்காட்சியளித்து முக்தி அருளினார்.
இளையான்குடிமாறார்
சிவனடியார்க்கு அன்னதானம் செய்வதை தடையின்றி நிறைவேற்றி வந்தார். ஒரு நாள் மழை பொழியும் இரவப் பொழுதில் சிவனடியார் கோலம் பூண்ட சிவபெருமான் அடியார்களின் இல்லத்திற்கு வந்தார். வீட்டில் நெல் இல்லாததால் அடியார்க்கு உணவளிக்க அந்த நள்ளிரவில் வயலை அடைந்து வயலில் விதைத்த நெல் மணிகளை கொண்டு வந்து, கூரையிலிருந்த கட்டைகளை விறகாக்கி, இளம் பயிர்களிலிருந்த பி்ஞ்சு காய்கறிகளை பறித்து சமைத்து அடியார்க்கு உணவளித்தார். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார்.
உருத்திர பசுபதி நாயனார்
நாள்தோறும் திருக்கோயில் குளத்தில் இறங்கி கழுத்தளவு வரையில் நீரில் நின்று பக்திப் பெருக்குடன் ருத்திர மந்திரம் ஓதி வந்தார். அதன் பயனாக சிவதரிசனம் கண்டு முக்தியடைந்தார்.
எறிபத்த நாயனார்
நாள்தோறும் திருக்கோயிற் பணிகள் பலவும் செய்து சிவத் தொண்டு புரிந்து வந்தார். இறையடியார்க்குத் தீ்ங்கு புரிவோரை வேல் எறிந்து தண்டித்ததால் எறிபத்தார் எனப் போற்றப்பட்டார். சிவகாமியாண்டார் எனும் திருத்தொண்டர் நாள்தோறும் சிவபெருமானுக்கு மலர் பறித்துக் கொடுக்கும் திருத்தொண்டினை புரிந்து வந்தார். ஒரு நாள் தெருவிலே சென்ற பட்டத்து யானை சிவகாமியாண்டார் பறித்து வந்த பூக்குவலையை இழுத்து மண்ணிலே சிதறி மிதித்து நாசம் செய்தது. இதையறிந்த எறிபத்தர் யானையை தொடர்ந்து ஓடிச் சென்று வேல் எரிந்து கொன்றார். தடுத்த பாகர்களையம் கொன்றார். விவரமறிந்த அரசரும் அங்கு சென்று நடந்த தவறுக்கு தாமும் பொறுப்பு என்று கூறி தம்மையும் கொல்லுமாறு எறிபத்தரிடம் வேண்டினார். மன்னரின் செயலை கண்ட எறிபத்தர் மன்னனின் சிவபக்தியை கண்டு தாம் ஒரு சிவபக்தருக்கு தீ்ங்கு செய்து விட்டோமே என எண்ணி வருந்தினார். நடந்த தவறுக்கு தன்னை மாய்த்து கொள்ளுவதே சரியென வாளினால் தன்னை வெட்டினார் எறிபத்தர். சிவபெருமான் அங்கு திருக்காட்சி அளித்து திருவருளால் யானையையும் பாகர்களையும் உயிர்ப்பித்து அருள் புரிந்தார். தொடர்ந்து பல்லாண்டுகள் சிவத் தொண்டு புரிந்து முக்தி அடைந்தார்.
ஏனாதி நாதர்
விபூதி இடும் உத்தம அடியார்களை பெரிதும் மதித்து வண்ங்கினார். அவரது ஊரில் பலருக்கு வாள் பயிற்சி அளித்து வந்தார். மற்றொரு வாளாசிரியனான அதிசூரன் பொறாமை காரணமாக வாள் சண்டைக்கு அழைத்தான். யார் வெற்றி பெறுகிறார்களோ அவரே வாள் பயிற்றுவிக்கும் ஆசிரியராக தகுதி படைத்தவர் ஆவார் என்றான். ஏனாதி நாதரும் அவன் அழைப்பை ஏற்று வாள் சண்டைக்கு ஆயத்தமானார். ஏனாதி நாதரை தந்திரமாக வெல்ல எண்ணிய அதிசூரன் ஏனாதி நாதரின் சிவபக்தியை அறிந்து நெற்றியில் திருநீற்றை பூசி வாள் சண்டைக்கு வந்தான். இதனைக் கண்ட ஏனாதி நாதர் கடவுளை நினைவுபடுத்தும் புனித நீறணிந்துள்ள இவனது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதே திருத்தொண்டின் கடமை என முடிவு செய்தார். கையில் வாளுடனும், கேடயத்துடனும் மெளனமாக நின்றார். அதிசூரன் ஏனாதி நாதரை தரையில் வீழ்த்தி வாளை பிடு்ங்கி கழுத்தில் வீசி விட்டு சென்றான். உடனே சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாய் வெளிப்பட்டு காட்சி தந்தார். சிவபரம்பொருளுடன் சிவலோகம் சென்று சிவகணமானார்.
ஐயடிகள் காடவர்கோன்
இவர் கடவுள் பக்தி மேலோங்க அறநெறியுடன் அருளாட்சி புரிந்தார். ஞானத்தால் முதிர்ந்த அவர் அரச வாழ்வை விட சிவனடியாரை திருத்தொண்டு செய்து வாழ்வது தான் மனிதப் பிறவிக்கு சிறந்தது என்று உணாந்தார். இளமையிலேயே அரசைத் துறந்து அவரது மைந்தனுக்கு முடி சூட்டிவிட்டு அடியார் கோலம் பூண்டார். பலப்பல திருத்தலங்களை அடைந்து வெண்பா பாடி துதி செய்து போற்றினார். இவ்வாறு பல்லாண்டு காலம் கோயில் திருப்பணிகள் புரிந்தும் ஈசனை போற்றி இசைபாடியும் சிவலோகம் சேர்ந்தார்.
கண்ணப்பர்
இவரது மற்றொரு பெயர் திண்ணன். இவர் காளத்தி மலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபட்டு வந்தார். தான் வேட்டையாடி வந்த விலங்கின் மாமிசத்தையம், தேனையும், மலர்களையும் சிவபெருமானுக்கு படைத்து மகிழ்ந்தார். பின்னர் வேட்டையாடச் சென்றார். சிவபெருமானை வழிபட வந்த சிவகோசரியார் என்ற அந்தண முனிவர் சிவலி்ங்கத்தின் அருகே சிதறிக் கிடந்த எலும்புகளையும் இறைச்சியையும் கண்டு திடுக்கிட்டார். எல்லாவற்றையம் நீக்கி துய்மையாக்கி சிவனை வழிபட்டு ஆசிரமத்திற்கு மீண்டார். இவ்வாறு ஐந்து நாட்கள் கழிந்தன. கருணை வடிவமான சிவபெருமானுக்கு பன்றியிறைச்சி படைக்கப்படும் பெரு்கொடுமையை எண்ணி துடிதுடித்தார் சிவகோசரியார். சிவகோசரியார் கனவில் தோன்றிய சிவபெருமான், இச்செயலை செய்து வருவது திண்ணன் எனும் வேடுவ அன்பன் என்றும், அவன் அன்பின் மிகுதியால் செய்யும் செயல்கள் எல்லாம் புனிதச் செயல் என்றும், நாளை நடப்பவற்றை மறைந்திருந்து கவனிப்பாய் என்றும் அருளிச் செய்து மறைந்தார். சிவகோசரியார் மறுநாள் இறைவன் கூறிய வண்ணம் மறைந்திருந்தார். வழக்கம் போல் திண்ணன் வேட்டையாடிய மாமிசமும், தலையில் பூக்களும், வாயில் நீருமாக மலையேறி வந்தார். அப்போது சிவபெருமான் லி்ங்கத்தின் ஒரு கண்ணிலே ரத்தம் ஒழுக செய்தார். இதைக் கண்டு துடிதுடித்த திண்ணன் குருதியை துடைத்தார். ரத்தம் நிற்காத போது மூலிகையின் சாறு பிழிந்து தடவினார். அப்போதும் நிற்கவில்லை. உறுப்புக்கு உறுப்பு அளிப்பதை விட சிறந்த மருத்துவம் இல்லை என்று உணர்ந்து, அம்பினால் தனது கண்ணை பறித்து குருதி வரும் கண்ணின் மீத அப்பினார். ரத்தம் நின்றது. ஆனால் மற்றொரு கண்ணில் ரத்தம் வழிய ஆரம்பித்தது. இதைக் கண்ட திண்ணன் தனது மற்றொரு கண்ணையும் பறிக்கலானார். இட அடையாளத்திற்காக தனது ஒரு காலை சிவலி்ங்கத்தின் மீது வைத்து அம்பினால் மற்றொரு கண்ணையும் பறிக்கலானார். அப்போது சிவபெருமான் வெளிப்பட்டு, திண்ணனை தடுத்து நிறுத்தினார். இழந்த கண்ணை மீண்டும் அளித்தார். திண்ணன் தனது கண்ணையே சிவனுக்கு அளித்ததால் கண்ணப்பர் ஆனார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவகோசரியார், கண்ணப்பரின் தன்னலமற்ற பக்தியைப் போற்றி புகழ்ந்து பரமனை பணிந்தார். சர்வேஸ்வரன், கண்ணப்பருடனும் சிவகோசரியாருடனும் மறைந்தருளினார்.
கணநாதர்
இவர் சீர்காழி திருத்தலத்தில் ஆலயத் திருப்பணிகளும், அடியார் தொண்டும் செய்து வந்தார். இவர் வேதம், ஆகமம், திருமுறைகள், புராணம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், திருக்கோயில் திருப்பணிகளை செய்வதற்கு பயிற்சி அளித்து சிறந்த தொண்டர்களை உருவாக்கும் பெருமைமிக்க ஆசிரியராக புகழ்பெற்று விளங்கினார். இவர் நாள்தோறும் சிவபெருமானையும், வி்ஷ்ணுவிற்கு முக்தி அளித்த சட்டை நாதரையம் திருஞானசம்பந்தரையும், தவறாமல் வழிபட்டு வந்தார். உயரிய வாழ்வு வாழ்ந்த இவர் இறுதியில் இவ்வுலக வாழ்வை நீத்த போது சிவலோகம் சேர்ந்து சிவகணநாதரானார்.
கணம்புல்லர்
இவர் சிவத்திருத்தலங்களில் திருவிளக்கேற்றி ஒளிமயமாக்கும் திருத்தொண்டினை புரிந்து வந்தார். பொருட்செல்வம் குறைந்த போதும் வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் விற்று திருத்தொண்டை தொடர்ந்தார். பின்னர், கணம்புல் என்ற புல்லால் திருவிளக்கேற்றி சிவத்தொண்டு புரிந்து வந்தார். ஒரு நாள் கணம்புல் மிகக் குறைவாக கிடைத்தது. இதனால், விளக்கேற்றுவதற்கு போதுமானதாக இல்லை. எஞ்சியுள்ள விளக்குகளுக்கு என்ன செய்வது என்று வருந்தினார். திருப்பணி தடைப்பட்டு போனதால் தன் தலையையே அரிந்து கொள்ளலானார். அப்போது, சிவபெருமான் அருட்பெருஞ்சோதி வடிவாய் காட்சி அளித்து முக்தி அருளினார்.
கலிக்கம்பர்
இவர் திருப்பெண்ணாடகத்தில் வணிகராக புகழ் பெற்று வாழ்ந்து வந்தார். இவர் நாள்தோறும் அடியார்களை வரவேற்று உபசரித்துப் பாத பூஜை செய்து, பால், பழம், தயிர் ஆகியவற்றோடு அறுசுவை விருந்து படைத்து அவர்கள் வேண்டும் பொருட்களையெல்லாம் இல்லை என்று சொல்லாமல் வழங்கி வந்தார். என்றும் போல, ஒரு நாள் அடியார்கள் வந்து உணவருந்தி விட்டு வேண்டும் பொருட்களை வாங்கிச் சென்றனர். அந்த அடியார் கூட்டத்திலே இருந்த ஒருவன் முந்தைய நாட்களில் கலிக்கம்பரிடம் வேலைக்காரனாக இருந்தவன். தீய பழக்கவழக்கம் காரணமாக அவன் வேலையை விட நேர்ந்தது. கலிக்கம்பரிடம் கோபம் கொண்டிருந்த அவன் அவரது தொண்டிற்கு இடையூறு செய்ய எண்ணினான். சிவனடியார் வேடம் பூண்டு வந்திருந்த அவன் கலிகம்பர்த் தம்பதியரிடம் அவர்களுடைய வலது கையை தருமாறு கேட்டான். சிவனடியாரை சிவமாகவே கண்டு போற்றும் கலிக்கம்பர் சிறிதும் தயங்காமல் தமது வலக்கரத்தையம், மனைவியாரது வலது கையையும் வெட்டி தந்தார். சிவபெருமானின் கருணையால் வெட்டப்பட்ட கைகள் மீண்டும் வளர்ந்தன. பல்லாண்டு காலம் சிவத்தொண்டு புரிந்து சிவலோகம் சேர்ந்து பேரின்பம் அடைந்தனர்.
கலிக்காம நாயனார்
கோயிலுக்கு திருப்பணிகள் செய்து சிவபக்தராக வாழ்ந்தார். சுந்தரர் பெருமான் சிவபெருமானை காதலுக்காக தூது அனுப்பியதை அறிந்து சினம் கொண்டார். பின்னர் இவருக்கு சூலை நோய் உண்டானது. இவரது கனவில் பரமேஸ்வரன் தோன்றி சுந்தரர் வந்தால் மட்டுமே இந்நோய் தீரும் என அருளிச் செய்தார். சுந்தரர் கனவிலும் பரமசிவன் தோன்றி கலிக்காமரின் நோயை தீர்த்து வைக்குமாறு அருளிச் செய்தார். சுந்தரர் வருவதை அறிந்த கலிக்காமர் சுந்தரரால் நோய் நீ்ங்கி வாழ்வதை விட இறப்பதே மேல் என்று கூறி வாளால் வெட்டிக் கொண்டு இறந்தார். அங்கு வந்த சுந்தரர் நடந்ததை அறிந்து தன்னையும் மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். சிவனருளால் உயிர்ப் பெற்று எழுந்த கலிக்காமர் சுந்தரரை தடுத்தார். சிவபெருமானின் அருளை உணர்ந்த சுந்தரரும், கலிக்காமரும் ஒருவரை ஒருவர் வணங்கிப் பணிந்து போற்றினர்.
கலிய நாயனார்
இவர் திருவொற்றியூர் திருத்தலத்தில் உள்ளும் புறமும் திருவிளக்கேற்றும் திருத்தொண்டினை புரிந்து வந்தார். இவரது செல்வ வளம் குன்றிய நிலையிலும் எண்ணை வியாபாரிகளிடம் வேலைக்குச் சேர்ந்து நாள்தோறும் விளக்கேற்றும் திருப்பணியை தொடர்ந்தார். பின்பு வேலை கிடைக்காத போது, வீட்டிலுள்ள பொருட்களை விற்று திருத்தொண்டை நிறைவேற்றி வந்தார். விற்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை வந்த போது திருப்பணி தடைப்பட்டு விடுமோ என உள்ளம் கலங்கினார். எண்ணெய் இல்லாத போது குருதியால் விளக்கேற்றுவேன் என முடிவு செய்த கலிய நாயனார், கத்தியை எடுத்து தன் உடலை வெட்டலானார். இவரது பக்திக்கு இரங்கிய படம்பக்த நாதர் வெளிப்பட்டு கலியாரின் கரத்தைப் பிடித்து தடுத்து நிறுத்தினார். சிவபெருமானின் திருக்காட்சி கண்ட கலிய நாயனார் சிவசோதியில் கலந்து முக்தி அடைந்தார்.
கழற்சிங்கர்
இவர் சிறந்த பல்லவ மன்னராக விளங்கினார். இவர் கோயில் சொத்துக்களுக்கு எவ்வித குறைவும் நேராத வண்ணம் ஆட்சி புரிந்தார். திருக்கோயில் சார்ந்த புனித பொருட்களுக்கு கேடு செய்பவர்களை தண்டித்து நீதி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு சமயம் திருக்கோவிலுக்கு சென்ற பட்டத்து அரசியார் அங்கு ஒரு அதிசய மலர் ஒன்று விழுந்து கிடப்பதைக் கண்டார். ஒரு நொடி தன்னை மறந்து இதற்கு முன் கண்டிராத அந்தப் பூவின் நறுமணத்தில் மயங்கி அதை முகர்ந்து பார்த்தார். சிவபெருமானுக்கு அணிவிக்கப்பட வேண்டிய பூவை அரசியார் முகர்ந்து அனுபவிப்பதை செருத்துணை எனும் அடியார் கண்டார். வீரத்தொண்டரான அவர் சினமடைந்து அரசியின் மூக்கை அரிந்தார். விவரமறிந்த கழற்சி்ங்கர், திருக்கோயிலின் புனிதப் பொருளான மலரை எடுத்த கையை துண்டித்தலே நீதியாகும் என்று கூறி அரசியின் கரத்தை வெட்டினார். தியாகராஜ பெருமானின் திருவருளால் மூக்கும், கரமும் நலமடைந்து முன்னைவிட பல மடங்கு அழகுடன் அரசியார் எழுந்தார். சிவபெருமானின் திருவருளைக் கண்டு போற்றிய கழற்சி்கரும், அரசியும், பூஜைகள் பல புரிந்து திருவிழாக்கள் நடத்தி வழிபட்டனர். பல்லாண்டு காலம் சிவத்தொண்டு புரிந்து சிவலோகம் சேர்ந்து சிவகண்களாயினர்.
காரி நாயனார்
இவர் கல்வி கேள்விகளில் சிறந்து பெரும் கவிஞராக விள்கினார். இவர் மூவேந்தர்களின் மேல் கவிதை இயற்றி காரிக்கோவை என தொகுத்து அமைத்தார். மூவேந்தர்கள் அளித்த பெரு்ஞ்செல்வத்தைக் கொண்டு திருக்கோயில் கட்டினார். அடியவர்களுக்கு வாரி வழங்கி தொண்டு புரிந்தார். பின்னர், திருக்கயிலை அடைந்து கயிலை நாதனைப் போற்றி வண்கினார். இவ்வுலக வாழ்வை நீத்த போது சிவலோகம் அடைந்து பிறவாநிலை பெற்றார்.
காரைக்கால் அம்மையார்
இவர் தனதத்தன் எனும் பெரும் வணிகருக்கு மகளாகப் பிறந்து கல்வி கேள்விகளில் சிறந்து விள்கினார். இவர் அடியவர்களை வரவேற்று உணவளித்து பொன் பொருள் அளிக்கும் திருத்தொண்டினை செய்து வந்தார். பின்னர், பரமதத்தன் என்பவரை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். ஒரு சமயம் பரமதத்தன் இரண்டு மாங்கனிகளை புனிதவதியாருக்கு வியாபாரி மூலம் கொடுத்தனுப்பினார். அதில் ஒரு மாங்கனியை அடியவருக்கு புனிதவதியார் உணவிட்டார். வீடு திரும்பிய பரமதத்தனுக்கு ஒரு மாம்பழத்தோடு உணவளித்தார். மிகுந்த சுவையடன் இருப்பதைக் கண்டு மற்றொரு பழத்தையம் கொண்டு வருமாறு கூறினான். சிவபெருமானின் அருளால், அவர் கையில் ஒரு மாம்பழம் வந்தது. சிவபெருமானின் அருளை எண்ணி மகிழ்ந்து அந்த மாங்கனியை கணவனிடம் கொடுத்தார். அது உலகிலேயே இல்லாத சுவையடன் இருப்பதை உணர்ந்தான். இது எங்கிருந்து வந்தது எனக் கேட்டான். புனிதவதியார் நடந்ததைக் கூறினார். இதை நம்பாத பரமதத்தன் இறைவனைக் கேட்டு மற்றொரு பழம் கொண்டு வரமுடியுமா என்றான். புனிதவதியாரும், சிவபெருமானை வேண்டி மற்றொரு பழத்தை பெற்றார். இதைக் கண்டு அதிர்ந்த பரமதத்தன் புனிதவதியார் ஒரு தெய்வப் பிறவி என்று உணர்ந்தான். அவரை விட்டு நீ்ங்கி மற்றொரு பெண்ணை மணந்து வாழந்து வரலானான். சுற்றத்தார்கள் புனிதவதியாரை பரமதத்தனுடன் சேர்த்து வைக்க புனிதவதியாரை அழைத்து சென்றனர். ஆனால், பரமதத்தன் தன் மனைவி குழந்தையுடன் புனிதவதியாரின் காலில் விழுந்து வணங்கினான். அதிர்ச்சியடைந்த புனிதவதியார் இனி தனக்கு அழகு எதற்கு என்று எண்ணி தனக்கு பேய் வடிவம் வழங்குமாறு இறைவனிடம் வேண்டினார். சிவனருளால் அவர் எலும்புக்கூடாக பேயுருவம் அடைந்தார். எல்லோரும் அச்சமும் ஆச்சரியமும் கொண்டு விலகி ஓடினர். இவர் சிவபெருமானைப் போற்றி அற்புதத் திருவந்தாதியையம், திருவிரட்டை மணிமாலையையம் பாடிப் பணிந்தார். திருக்கைலாயம் சென்று கயிலைநாதனின் திருக்காட்சி கண்டார். எப்போதும் சிவனின் சிலம்பத் திருவடிகளின் கீழ் இருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார். அவரது வேண்டுகோளை, ஏற்ற கயிலைநாதன் திருவாலங்காட்டில் தமது திருநடனத்தை கண்டு தம்முடன் இருப்பாயாக என்று அருளிச் செய்தார். இறைவனின் திருநடனத்தை கண்டபடி, ஈசன் திருவடிக்கீழ் என்றென்றும் நிலைத்தார். இவர் காரைக்கால் அம்மையார் என அனைவராலும் போற்றப்படுகிறார்.
குங்கிலியகலையனார்
இவர் அந்தணர் குலத்தில் பிறந்து பெரும் சிவபக்தராக விளங்கினார். இவர் நாள்தோறும் தூப வழிபாட்டிற்குக் கு்ங்கலியம் என்னும் நறுமணப்புகை அளிக்கும் திருத்தொண்டினை தவறாமல் செய்து வந்தார். செல்வம் முழுவதும் வற்றிய நிலையில் மனைவியின் கழுத்திலிருந்த மாங்கல்ய சரட்டின் பொன்னை எடுத்து குங்கலியம் வாங்கினார். இவரது பக்தியால் மகிழ்ந்த ஈசன் கலயாரின் குடும்பத்திற்கு குபேர செல்வத்தை அருளிச் செய்தார். ஈசனின் கருணையைப் போற்றிய அடியார் அச்செல்வத்தின் மூலம் வேள்விகளும், திருப்பணிகளும் செய்தார். இவர், திருப்பனந்தாள் தாடகையீச்சரம் திருக்கோயிலில் உள்ள லி்ங்கத் திருவரு சாய்ந்து இருப்பதை அறிந்தார். அங்கு சென்று தனது கழுத்திலே கயிறு கட்டி ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி சிவலி்ங்கத்தை இழுத்தார். இவரது முயற்சிக்கும், பக்திக்கும் இளகிய சிவபெருமான் லி்ங்கம் நேராக நிமர்த்தி அருளினார். தொடர்ந்து ஈசன் தந்த செல்வத்தால் இறைத் தொண்டும் அடியார் தொண்டும் செய்து சிவலோகம் சேர்ந்து சிவமயமானார்.
குலச்சிறையார்
இவர் கூன் பாண்டிய மன்னனிடம் அமைச்சராக பணிபுரிந்தார். இவர் சிவனடியாரைப் போற்றி உணவிட்டு, வேண்டும் பொருள் வழங்கும் திருத்தொண்டினை புரிந்து வந்தார். சமண குருமார்கள் பாண்டியனை சமண மதத்திற்கு மாற்றிய போதும் இவர் சிவனடியார்க்குத் தொண்டு புரிந்து வந்தார். பின்னர் வெப்ப நோயால் மன்னன் அவதியற்ற போது இவர் திருஞானசம்பந்தரை அரண்மனைக்கு அழைத்து வந்தார். ஞானசம்பந்தர் விபூதி மகிமை பாடிப் பாண்டியனின் உடலில் திருநீற்றை பூசினார். சிவபெருமானின் கருணையினால் வெப்ப நோய் தீர்ந்து நலம் பெற்றான். ஆனாலும், சமணர்களின் சொல்படி பாண்டிய மன்னன் சம்பந்தரை அனல் வாதத்திற்கும் புனல் வாதத்திற்கும் அழைத்தான். ஞான சம்பந்தரின் தெய்வீக ஆற்றலால் திருமுறை ஏடுகள் நெருப்பிலும் நீரிலும் அழியாமல் பொலிவுற்றது. மன்னன் தன் தவற்றை உணர்ந்து ஞானசம்பந்தரை பணிந்தான். இதனால் பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் தழைக்க ஆரம்பித்தது. குலச்சிறையார் ஞானசம்பந்தருடன் சென்று பல தலங்கள் சென்று வழிபட்டார். பின்னர் பல்லாண்டுகள் அடியார் பணியும், அரண் பணியும் புரிந்து சிவலோகம் எய்தினார்.
கூற்றுவர்
இவர் களந்தை என்ற ஊரை ஆண்டு வந்தார். இவர் சோழ மன்னர்களை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றினார். சோழ மன்னர்களின் மரபுப்படி முடிசூட்டிக் கொள்வதற்காக தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்றார். தில்லைவாழ் அந்தணர்கள், சோழர் குல அரசர்களைத் தவிர வேறு யாருக்கும் முடிசூட்ட மாட்டோம் என்று மறுத்தனர். இதனால் வருந்திய கூற்றுவர் தில்லை நடராஜரிடம் இறைவனின் ஆடும் திருவடிகளை தனக்கு மணிமகுடமாக ஆக்க வேண்டும் என்று வேண்டினார். கூற்றுவரின் கனவில் தோன்றிய நடராஜர் தனது ஆனந்தத் திருவடிகளை கூற்றுவ மன்னரின் தலையில் பதித்து வைத்து அருளினார். கண் விழித்த கூற்றுவ மன்னர் இறைவனின் கருணையை நினைத்து ஆனந்தமடைந்தார். இறைவனின் திருவடிகளையே மணிமகுடமாகக் கொண்டு சிறப்புடன் ஆட்சி புரிந்தார். நாடெங்கும் திருக்கோயில்களில் பூஜைகளும், திருவிழாக்களுக் சிறப்பாக நடக்குமாறு செய்தார். சைவ நெறியில் நின்று எல்லோரும் மகிழுமாறு செங்கோலாட்சி புரிந்து ஈசனின் திருவடிகளை எய்தினார்.
கோச் செங்கட் சோழன்
இவர் சோழர் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர். இவர் கடவுள் பக்தராகவும், முற்பிறவி நினைவு வரப்பெற்றவராகவும் புகழ் பெற்று விளங்கிகயவர். இமயம் முதல் குமரி நாடு முழுவதும் கடவுளுக்கு மாடக்கோயில் எனப்படும் எழுபது மிகப்பெரிய சிவாலயங்களைக் கட்டி வழிபட்டார். சிதம்பரம் பொன்னம்பலத்தை பொன்வேய்ந்து புதுப்பித்தார். ஈடு இணையற்ற மன்னராக ஆட்சி புரிந்த கோச்செங்கணார். முக்தி அடைந்து சிவலோகம் சேர்ந்தார்.
கோட்புலி நாயனார்
இவர் ஆண்டவனுக்குத் திருவமுது அளிக்கும் திருத்தொண்டினை புரிந்து வந்தார். இவர் சோழ மன்னனின் படைத்தலைவராக பணிபுரிந்தா. ஒரு சமயம் இவரது ஊருக்கு வந்த சுந்தரர் கோட்புலியார் இல்லத்திற்கு சென்றார். கோட்புலியாரின் புதல்விகளான சி்ங்கடி, வனப்பகை என்ற இருவரும் சுந்தரரை வணங்கிய போது சுந்தரர் அவர்களை தன்னுடைய குழந்தைகளாக ஏற்றுக் கொண்டு சிறப்பளித்தார். இவர் போரின் காரணமாக போர்களம் செல்ல நேர்ந்த போது தாம் திரும்பி வரும் வரையிலும் திருப்பணியை தொடருமாறு தமது குடும்பத்தாரிடம் தேவையான நெல்லை அளித்துச் சென்றார். போரின் காரணமாக நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. கோட்புலியின் குடும்பத்தார் வேறு வழியின்றி திருப்பணிக்கான நெல்லை உண்டு வாழ்ந்து வந்தனர். போரில் வெற்றி கொண்டு திரும்பிய கோட்புலியார் திருப்பணிக்கான நெல்லை உறவினர்கள் உண்டு விட்டதை அறிந்து பெருஞ்சின்ங் கொண்டார். மனைவி, கைக்குழந்தை உட்பட அனைவரையம் வெட்டிக் கொன்றார். தன்னையும் வாளால் வெட்டிக் கொள்ளலானார். அப்போது ஈசனார் வெளிப்பட்டு காட்சி தந்தார். ஈசன் அருளினால் மறைந்த அனைவரும் உயிர்ப் பெற்றனர். கோட்புலியார் குடும்பத்தாருடன் சிவலோகம் சென்று முக்தியடைந்தார்.
சடைய நாயனார்
இவர் சிவகணநாதரான சுந்தரரை மகனாகப் பெறும் பேறு பெற்றவர். இவர் சுந்தரரை நரசி்ங்கமுனை மன்னருக்கு வளர்ப்பு மகனாக அளித்தார். பெற்ற ஒரே பிள்ளையை திருத்தொண்டு புரிய நாட்டிற்கு அர்ப்பணித்தவர்.
சண்டேஸ்வர நாயனார்
இவர் அந்தணராக இருந்த போதும் புண்ணியாத்மாக்களான பசுக்களை பாதுகாத்து நடத்துவதே சிறந்த திருத்தாண்டு என்று உணர்ந்து அந்தணர்களின் அனுமதி பெற்று தானே மாடுகளை மேய்க்கத் தொடங்கினார். மணலில் சிவலி்ங்கம் வடித்து பசு சொரியும் பாலினால் அபிஷேகம் செய்து வழிபடலானார். இவரது பூஜையின் தன்மையையும், உண்மையையும் உணராத ஒருவன் ஊராரிடம் சென்று தவறாக முறையிட்டான். ஊரார்கள் சண்டேசுவரரின் தந்தையான எச்சதத்தனை அழைத்து இது குறித்து கேட்டனர். விவரமறியாத எச்சதத்தனும் சண்டேசுவரர் மாடு மேய்க்கும் இடம் சென்று அங்கு இருந்த பூஜை பொருட்களை காலால் எட்டி உதைத்தான். சண்டேசுவரர் அவரிடமிருந்த கோலை எடுத்து வீசினார். அது கோடாரியாக மாறி எச்சதத்தனின் கால்களை வெட்டியது. தந்தை என்றும் பாராமல் குற்றத்திற்கு தண்டனை வழங்கிகய சண்டேசுவரரின் முன் சிவபரம்பொருள் மும்மூர்த்தி முதலான தெய்வங்களும், தேவர்களும் சூழ காட்சி அளித்தார். தேவர்களுக்கும், கணநாதர்களுக்கும் தலைவனான சண்டிப் பதவியை அளித்தார். ஈசனின் திருவருளால் எச்சதத்தன் நலமடைந்தான். சண்டீசர் ஈசனுடன் மறைந்தருளினார்.
சத்தி நாயனார்
அடியார்கள் மனம் புண்பட்டால் அரசும் நாடும் அழியும் என்று உணர்ந்த சத்தி நாயனார், அடியவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து அவர்களை போற்றி பணிந்தார். இவர் அடியார்களை இகழ்ந்து பேசி அவர்களது தூய மனதை புண்ணாக்கும் குற்றத்தை செய்யும் கொடியவர்களின் நாக்கை அறுத்து எறியும், வீரமும் வல்லமையும் கொண்டிருந்தார். இவ்வாறு அடியவர்களிடம் அன்பும், மதிப்பும் கொண்டு வீரத் திருத்தொண்டு புரிந்து வாழ்ந்து சிவபதம் சேர்ந்தார்.
சாக்கியர்
இவர் பெளத்த குருமார்களின் பேச்சில் மயங்கிக மதம் மாறினார். எனினும், பெளத்தர்களின் மாமிச வார்த்தையும், பொருந்தாத போலிக் கொள்கைகளையும், மனித வழிபாட்டையும் அவரது மனம் ஏற்க மறுத்தது. பெளத்த மதத்தில் இருந்து விலகிச் செல்வோரை கொடுமைப்படுத்துவதோடு, கொலையும் செய்வதைக் கண்டு அவரால் சைவ நெறிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு நாள் மரத்தடியில் உள்ள சிவலி்ங்கத்தை வழிபட சென்றார். அப்போது அவ்வழியே புத்த குருமார் சென்று கொண்டிருந்தனர். அவர்களை கண்டவுடன், உடனே அருகே இருந்த கல்லை எடுத்து சிவலி்ங்கத்தின் மீது எறிந்தார். எனினும், அன்னியர்களுக்கு அடிமையாகி இத்தகைய செயலை செய்ததற்கு வருந்தினார். ஈசனார் அவரது கனவில் தோன்றி அவர் எறிந்த கல்லை மலராக ஏற்றுக் கொண்டதாகக் கூறி மறைந்தார். மகிழ்ச்சியடைந்த சாக்கியர் அன்று முதல் அசைவ உணவை விடுத்து கல்லெறிந்து சிவபெருமானை வழிபட்டபின் கஞ்சி மட்டும் உண்பதை நியமமாகக் கொண்டார். இவ்வாறு பல்லாண்டு காலம் கல் வழிபாடு செய்த சாக்கியர் ஈசனின் அருளால் முக்தியடைந்தார்.
சிறப்புலி நாயனார்
அந்தணர் மரபில் பிறந்த இவர் நாள்தோறும் தவறாது வேள்வி செய்து சிவபெருமானை தொழுது வந்தார். வந்து கேட்பவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் வேண்டுவன அனைத்தும் வாரி வழங்கினார். அவரது ஊரில் தருமசாலைகள், அன்னசத்திரங்கள், மடங்கள், கல்வி நிலையம், மருத்துவச்சாலை போன்ற பலப்பலவும் நிறுவித் தொண்டு செய்தார். இவ்வாறு, திருத்தொண்டு புரிந்த சிறப்புலி நாயனார் இறுதியில் சிவலோகம் சேர்ந்து சிவபதம் அடைந்தார்.
சிறுதொண்டர்
இவரது மற்றொரு பெயர் பரஞ்சோதியார் இவர் திருவெண்காட்டு நங்கை என்பவரை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். இவர்களுக்கு சீராளன் என்ற பெயருடன் ஒரு புதல்வன் இருந்தான். இவர்கள் நாள்தோறும் சிவனடியார்க்கு உணவளிக்கும் திருத்தொண்டினை புரிந்து வந்தனர். ஒரு நாள் பைரவ அடியார் உருவில் வந்த சிவபெருமான் இவர்களது பிள்ளையினை கறியாக சமைத்துத் தருமாறு கேட்டார். தம்பதியரும் சிறிதும் தயங்காமல் தங்களது ஒரே பிள்ளையை அரிந்து சமைத்து அடியாருக்கு பரிமாறினர். இவர்களது பக்திக்கு மெச்சிய சிவபெருமான் பிள்ளையை உயிர்ப்பித்து அருட்காட்சியளித்து முக்தியளித்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார்
இவர் திருநாவலூரில் சடையனார் இசைஞானியார் என்பவர்க்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நம்பியாரூரர் இவர் அந்நாட்டு மன்னராகிய நரசி்ங்கமுனையர் என்பவர்க்கு வளர்ப்பு மகனாக அந்தணர் நெறியில் வளர்க்கப்பட்டார். இவர் திருமணப் பருவம் அடைந்ததும் சிவாச்சாரியார் என்பவரின் மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தன்று அவரைத் தடுத்தாட்கொள்ளும் பொருட்டு சிவபெருமான் முதிய அந்தணர் கோலத்தில் திருமண இல்லத்திற்கு வந்தார். திருமணத்தை நிறுத்தி நம்பியாரூரர் தமக்கு அடிமை என்றும், அவரது பாட்டனார் எழுதிக் கொடுத்த அடிமை ஓலை தன்னிடம் உள்ளது என்றும் கூறினார். இதை நம்பியாரூரரும், அங்கிருந்தோரும் நம்ப மறுத்தனர். இந்த வழக்கு குறித்து பேச திருவெண்ணெய்நல்லுர் சபைக்குச் சென்றனர். வழக்கின் முடிவில் ஓலையில் உள்ள கையெழுத்தும், நம்பியாரூராரின் பாட்டனாரது கையெழுத்தும் பொருந்தி இருந்ததால் அம்முதியவருக்கு நம்பியாரூரர் அடிமை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தணர் தமது இருப்பிடத்தை காட்டுகிறேன் எனக் கூறி நம்பியாரூரரை பின் தொடருமாறு கூறினார். தனது நிலை குறித்து வருந்திய நம்பியாரூரரும் வேறு வழியின்றி முதியவரை பின்தொடர்ந்தார். அந்தணர் திருவெண்ணெய்நல்லுர் திருக்கோயிலை அடைந்து மறைந்து போனார். நம்பியாரூரர் வியப்படைந்து அவரை அழைத்துப் பார்த்தார். அப்போது சிவபெருமான் தோன்றி உம்மை தடுத்தாட்கொள்ளவே இவ்வாறு செய்தோம், எம்மை வன்மை பேசியதால் நீ வன்தொண்டன் என அழைக்கப்படுவாய், என்னை போற்றித் திருப்பதிகம் பாடுமாறு அருளிச் செய்தார். உணர்ச்சிப் பெருக்குடன் சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்னும் திருப்பதிகத்தை பாடினார். தொடர்ந்து என்னைப் பாடிக் கொண்டே இருப்பாயாக எனக் கூறி ஈசன் மறைந்தருளினார். பின்னர் பல திருத்தலங்களை வழிபட்டு திருப்பதிகங்கள் பல பாடினார். திருவாரூர் சென்று தியாகராஜப் பெருமானை வழிபட்டார். அங்கு பரவையார் என்பவரை கண்டு காதல் கொண்டார். சுந்தராின் உள்ளம் அறிந்த ஈசன் பரவையாரை சுந்தரருக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு திருவாரூர் நேயர்கள் கனவில் அருளிச் செய்தார். அவ்வாறே சுந்தரருக்கும், பரவையாருக்கும் திருமணம் செய்வித்தார்கள். இருவரும் இன்ப வாழ்வ நடத்தி வந்தனர். ஒரு நாள் திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் சென்ற நம்பியாரூரர் அங்கு இருந்த திருத்தொண்டர்களை கவனிக்காமல் சென்றார். அப்போது விறண்மிண்ட நாயனார் சுந்தரரின் செயலை கண்டித்தார். நம்பியாரூரர் தியாகராஜப் பெருமானின் அருளால் அடியவர்களின் சிறப்பைப் போற்றும் வண்ணம் திருத்தொண்டத்தொகை எனும் திருப்பதிகத்தை பாடினார். இதை மூலமாக வைத்தே பின்னர் பெரிய புராணம் இயற்றப்பட்டது. பின்னர் பல திருத்தலங்கள் சென்று திருவொற்றியூர் அடைந்தார். அங்கு சங்கிலியார் என்பவரை கண்டு மணம் புரிந்தார். மகிழ மரத்தின்கீழ் நின்று சங்கிலியாரை பிரியேன் என சத்தியம் செய்தார். சிறிது காலம் சங்கிலியாருடன் வாழ்ந்து வந்தார். எனினும் பின்னர் திருவாரூர் செல்லும் வேட்கை எழுந்தது. திருவொற்றியூரை விட்டு நீ்ங்கினார். சபதம் தவறியமையால் அவருக்கு பார்வை பறிபோனது. இழந்த பார்வையை மீட்க பல திருத்தலம் சென்று வழிபட்டார். இறுதியில் திருவாரூரில் ஈசன் அருளால் பார்வை கிட்டியது. சங்கிலியாரை மணம் புரிந்ததை அறிந்த பரவையார் கோபத்தில் இருந்தார். அவரை சமதானம் செய்ய சிவனையே தூதாக அனுப்பினார். ஈசனின் அருளால் இருவரும் இணைந்தனர். பின்னர் சேரமான் பெருமான் நாயனாரிடம் நட்பு பூண்டு பல்வேறு திருத்தலங்கள் சென்று திருப்பதிகம் பாடினார். இறுதியில் திருவச்சைக்களம் எனும் திருத்தலத்தில் முக்தி அளிக்குமாறு இறைவனிடம் வேண்டினார். சிவபெருமான் வெள்ளை யானை ஒன்றை அனுப்பினார். அதில் ஏறி கயிலை அடைந்து சிவகணமானார்.
செருத்துணை நாயனார்
இவர் கழற்சி்ங்க நாயனாரின் மனைவியான பட்டத்து அரசி சிவனுக்கு சாத்த வேண்டிய மலரை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காக அவரது மூக்கை அரிந்தார்.
சேரமான் பெருமாள் நாயனார்
இவர் மேனியெல்லாம் விபூதியணிந்து திருக்கோயில் பணிகள் செய்து தொண்டராய் வாழ்ந்தார். இவர் திருத்தொண்டு செய்து வரும் காலத்தில் அந்நாட்டின் மன்னன் சிவகதியடைந்தான். அமைச்சர்கள் கூடி ஆலோசித்து சேரமான் பெருமாளை அரசுப் பொறுப்பை ஏற்குமாறு வேண்டினார்கள். இவர் அரசுப் பொறுப்பை ஏற்பது குறித்து திருக்குறிப்பு அருளிச் செய்ய வேண்டும் என சர்வேஸ்வரனிடம் வேண்டினார். இவருக்கு அருள் புரிந்த சிவபெருமான் அனைத்து உயிர்களின் ஒலியையும் மொழியையும் அறிந்து கொள்ளும் ஆற்றலும், அளவற்ற வலிமையும், தெய்வீக படைக்கலன்களும், தெய்வீக வெள்ளைக் குதிரையையும் அளித்தார். பின்பு, அரசப் பொறுப்பை ஏற்று ஜீவகாருண்ய சைவநெறியில் நின்று அருளாட்சி புரிந்தார். நாள்தோறும் பூஜையின் முடிவில் அம்பலத்தரசனின் சிலம்பொலியைக் கேட்கும் பேரருளைப் பெற்றார். இவர் சுந்தரரிடம் நட்பு கொண்டு சுந்தரருடன் பலத் திருத்தலங்கள் சென்று பதிகம் பாடி சிவனைப் போற்றினார். பின்னர், இருவரும் வானத்தில் பறந்து ஒளிமயமான சிவலோகம் சேர்ந்து சிவகணங்களாயினர்.
சோமசிமாறர்
அந்தணர் குலத்தில் பிறந்த இவர் தமிழ் வேதங்களிலும் வடமொழி வேதங்களிலும் சிறந்து விளங்கினார். இவர் நறுமணப் புகையாலும், மலர்களாலும், மந்திரங்களாலும், வேள்விகளையம் சிறப்பான யாகங்களையம் செய்து வந்தார். சிவபக்தர்களை வரவேற்று உணவளித்து வேண்டுவன கொடுத்து உதவுவதை நியமமாகக் கொண்டு திருத்தொண்டு புரிந்து வந்தார். இவர் சுந்தரரின் நண்பராகி கோயில் திருப்பணிகளும், அடியார் பணிவிடையும் தொடர்ந்து செய்து சிவலோகம் சேர்ந்து சிவபதம் அடைந்தார்.
தண்டியடிகள்
இவர் பிறவிக் குருடராக இருந்த போதும் திருக்கோயில் திருக்குளத்தை தனி ஒருவராக தூர் வாரினார். சமணர்களால் இவரது திருப்பணிக்கு தடங்கல் உண்டாயிற்று. இவரது கனவில் தோன்றிய ஈசன் நாளை திருக்குளத்தில் முழ்கி எழும் போது கண் பார்வை பெறுவாய் என்று அருளிச் செய்து மறைந்தார். மறுநாள் அவ்வாறே குளத்தில் முலழ்கி எழுந்ததும், கண் பார்வை பெற்றார். இவரை துன்பறுத்திய சமணர்களுக்கு பார்வை பறிபோயிற்று. தொடர்ந்து கோயில் திருப்பணிகள் பல செய்து முக்தி அடைந்தார்
திருக்குறிப்புத் தொண்டர்
இவர் நாள்தோறும் அடியவர்களின் ஆடையைத் தோய்த்துக் கொடுக்கும் தொண்டினை செய்து வந்தார். இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒருநாள் சிவனடியார் வேடம் பூண்டு வந்தார். அடியாரை கண்ட திருக்குறிப்புத் தொண்டர், அவரது ஆடையை மாலைக்குள் தோய்த்து உலர்த்தி தருவதாக கூறி பெற்றுக் கொண்டார். ஆனால் அவர் தோய்க்கத் தொடங்கிய போது பெருமழை பொழிந்தது. மாலை வரை மழை பொழிந்துக் கொண்டே இருந்தது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியவில்லையே என வருந்திய திருக்குறிப்புத் தொண்டர், இனி இறப்பது தான் சரி என்றெண்ணி பாறையில் தலையை முட்டி மோதிக் கொள்ளத் தொடங்கினார். சிவபெருமான் வெளிப்பட்டு அவரைத் தடுத்தாட் கொண்டார்.
திருஞானசம்பந்தமூர்த்தி
இவர் தமது மூன்றாம் வயதில் பார்வதி தேவியிடம் ஞானப்பால் அருந்தி ஞானம் அடைந்தார், ஞானசம்பந்தர் என அனைவராலும் போற்றப்பட்டார். ஞானசம்பந்தர் பல திருத்தலம் சென்று திருப்பதிகம் பாடினார். இவரது சிறிய திருவடிகள் நோக பையப் பைய நடந்து திருத்தலங்களை அடைந்தார். சிவபெருமான் ஞானசம்பந்தர் கனவில் தோன்றி பல்லக்கு முதலியன உன்னை வந்து சேரும் ஏற்றுக் கொள்வாயாக என அருளிச் செய்தார். அவ்வாறே, ஒவ்வொரு அந்தணர் கனவில் தோன்றி முத்துச்சிவிகை, சின்னமும், குடையும் ஞானசம்பந்தரிடம் அளியுங்கள் என அருளிச் செய்தார். அவ்வாறே அந்தணர்களும், ஈசனருளால் கிடைத்த பல்லக்கினை ஞானசம்பந்தரிடம் அளித்தனர். பின்னர் இவர் தலந்தோறும் சென்று தேவாரத் திருப்பதிகம் அருளினார். ஈசனது அருளால் பல அற்புதங்களை புரிந்தார். சிவனடியார் துயர்களை திருப்பதிகம் பாடி போக்கினார். பாம்பால் தீண்டப்பட்டு இறந்த வணிகனை உயிர்ப்பித்தார். சாம்பலிலிருந்து பூம்பாவாய் என்ற பெண்ணை உயிர்ப்பித்து அளித்தார். இவ்வாறு அற்புதங்கள் புரிந்த ஞானசம்பந்தர் சமணர்கள் பிடியிலிருந்த நாடுகளை மீட்டார். சமணர்களிடம் வாதப்போரில் வென்று பாண்டியனையம், பாண்டிய நாட்டினையம் சைவ நெறிக்கு மாற்றினார். திருநாவுக்கரசருடன் சேர்ந்து பலத்திருத்தலங்கள் சென்று திருப்பதிகம் பாடினார். பல தலங்ககளையம் கண்டு இன்னிசை தமிழ் மந்திரங்களால் வணங்கி சீர்காழீ மீண்டார். பதினாறு வயதான திருஞானசம்பந்தருக்கு நம்பாண்டார் நம்பியின் மகளை நிச்சயித்தனர். திருமண சடங்கு நிறைவேறிக்கொண்டிருந்த போது, தாம் பரமனை சென்றடையம் பருவம் வந்து விட்டதை உணர்ந்தார். நல்லூர்ப் பெருமணம் எனும் பதிகத்தைப் பாட, சோதி ஒன்று தோன்றியது. முக்தி பெற விரும்பும் அன்பர் இச்சோதியில் நுழையமாறு ஞானசம்பந்தர் கூறினார். அத்திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் சோதியில் கலந்து முக்தியடைந்தனர். திருஞானசம்பந்தரும் தன் மனைவியுடன் அதில் கலந்து மறைந்தார்.
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
இவர் திருஞானசம்பந்தரிடம் அன்பு பூண்டு சம்பந்த பெருமானுடனேயே தங்கி இருந்து அவருடன் பல திருத்தலம் சென்று அவருடைய திருப்பதிக்களுக்கு யாழ் மீட்டி வாசித்து வந்தார். இவர் ஞானசம்பந்தரது திருமண முடிவில் அருட்பெருஞ்சோதியில் கலந்து முக்தி அடைந்தார்.
திருநீலகண்டர்
இவர் குயவத் தொழில் புரிந்து வந்தார். இவர் மற்றொரு பெண்ணிடம் உறவு கொண்டுள்ளார் என்று கருதிய திருநீலகண்டரின் மனைவி தன்னை தீண்டாதீர்கள் என்று விலகினார். திருநீலகண்டரும் உன்னை மட்டுமன்று உலகிலே எந்தப் பெண்ணையும், மனதாலும் தீண்டமாட்டேன், இது இறைவன் மீது ஆணை என்றார். சத்தியத்திலும், ஒழுக்கத்திலும் தவறாத இருவரும் அடியார்க்குத் திருத்தொண்டு புரிந்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இருவரும் இளமை கழிந்து முதுமை எய்தினர். சிவனடியார் கோலத்தில் வந்த ஈசன் ஒரு திருவோட்டினை அளித்து அதை பின்னர் பெற்றுக் கொள்வதாக திருநீலகண்டத்திடம் வழங்கினார். பின்னர், திரும்பிய வி்ஸ்வேஸ்வரன், திருவோட்டினை எடுத்து வருமாறு சொன்னார். ஆனால் திருவோடு இல்லாது மறைந்து போனது. இதனால் வருந்திய திருநீலகண்டர், அடியவர் கால்களில் பணிந்து திருவோடு காணாமல் போனது குறித்துக் கூறினார். இதை நம்பமறுத்த சிவனடியார் சபையைக் கூட்டி, திருநீலகண்டர் தம் மனைவியின் கரம் பிடித்து நீரில் முழ்கி, சத்தியம் செய்தால் தாம் நம்பவதாக கூறினார். சபையோரும் ஆமோதித்தனர். வேறு வழியின்றி, தாம் மனைவியை தீண்டாமல் வாழும் நிலையை சபையோரிடம் எடுத்துக் கூறினார். ஒரு தண்டினை எடுத்து அதன் முனைகளை பிடித்துக் கொண்ட தம்பதியர் குளத்திலே முழ்கினர். எழுந்த போது, முதுமை நீ்ங்கி இளமையடனும், அழகுடனும் விளங்கினர். அனைவரும் வியந்திருந்த போது சிவபெருமான் காட்சி அளித்தார். ஈசன் அருளால் என்றும் மாறா இளமையடன் சிவலோகம் சேர்ந்து சிவகணங்களாயினர்.
திருநீலநக்க நாயனார்
இவர் திருக்கோயில் அர்ச்சகராக தொண்டாற்றி வந்தார். ஒரு சமயம் இவரது மனைவி சிவலி்ங்கத்தின் மீதிருந்த சிலந்தியை வாயால் ஊதித் தள்ளினார். இதைக் கண்ட திருநீலநக்கர் இதனால் பெருத்த குற்றமும், அபச்சாரமும் ஏற்பட்டிருக்குமோ என வருந்தினார். கனவில் தோன்றிய சிவபெருமான் இதனால் தீ்ங்கொன்றுமில்லை என்று அருளிச் செய்தார். கண்விழித்த திருநீலநக்கர் நிம்மதியடைந்தார். இவர் திருஞானசம்பந்தரின் திருமண சடங்கினை நடத்தி வைத்தார். ஞானசம்பந்தருடன் சிவ ஜோதியில் கலந்து முக்தியடையந்தார்.
திருநாளை போவார்
இவரது மற்றொரு பெயர் நந்தனார். இவர் தாழ்ந்த குலத்தில் பிறந்த போதும் தீய பழக்க வழக்கங்கள் இல்லாமல் நற்பண்புகளுடன் வளர்ந்தார். இசைக் கருவிகளுக்கு தேவையானவற்றைத் தந்து திருத்தொண்டு செய்த நந்தனார், ஒரு நாள் திருப்புன்கூர் என்ற ஊரை அடைந்தார். கோயிலுக்கு வெளியே நின்று சிவலி்ங்கத்தை நேருக்கு நேர் கண்டு தொழ வேண்டும் என இறைவனை வேண்டினார். இறைவனும் இவருக்கு தரிசனம் அளிக்க நந்தியை விலகுமாறு பணித்தார். நந்தியும் விலகியது. இறைவனது கருணையை வியந்த நந்தனார் பரம் பொருளை கண்டு களித்து மகிழ்ந்தார். பின்னர் ஊர் திரும்பினார். முக்தி வழங்கும் திருத்தலமான சிதம்பரம் செல்ல வேண்டும் என விருப்பம் கொண்டார். ஆனால், தான் தாழ்ந்த குலத்தில் பிறந்த வருத்தத்தால் தில்லை செல்லாமல் நாளை போவேன் என்று சொல்லி வந்தார். இதனால் இவரை திருநாளைப்போவார் என்றே அழைத்தனர். ஒரு நாள் இவர் தில்லை சென்றே ஆக வேண்டும் என்றெண்ணி தில்லையை அடைந்தார். அங்கு நிலவிய புனித சூழலைக் கண்டு தாம் அந்தணராக பிறக்கவில்லையே என்று ஏங்கிகினார். அன்றிரவு ஓரிடத்தில் கண்ணயர்ந்தார். கனவில் தோன்றிய சிவபெருமான் நாளை திருக்கோயில் முன் தீக்குளிப்பாயாக, உன் விருப்பப்படியே அந்தண முனிவராய் எழுந்து வருவாய் என அருளிச் செய்தார். ஈசனின் சொல்படி மறுநாள் தீ மூட்டி தீயில் இறங்கினார். ஈசனின் அருளால் பொன்னிற மேனியுடன், பூனுலும், சடைமுடியுமாக புண்ணிய முனிவராக மேலெழுந்தார். தில்லைவாழ் அந்தணர்களோடு திருக்கோயிலுள் புகுந்தார். நடராஜரை தரிசித்து தில்லையம்பலத்தில் மறைந்து முக்தி பெற்றார்.
திருநாவுக்கரசர்
இவர் திருவாமூர் என்ற ஊரில் வேளாள மரபில் பிறந்தார். இவரது முதல் பெயர் மருணீக்கியார். இவரது தமக்கை திலகவதியார் ஆவார். சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்ததால் தமக்கையாரால் வளர்க்கப்பட்டார். மருணீக்கியார் சமண சமயத்தில் பற்றுக்கொண்டு சமண சமயக் கலைகளை ஓதியுணர்ந்தார். இதனையறிந்த திலகவதியார் வருத்தமுற்றார். சிவபெருமானை தொழுது தனது தம்பியாரை சைவ நெறிக்கு ஆண்டருள வேண்டும் என வேண்டினார். ஈசன் மருணீக்கியாருக்கு சூலை நோய் ஏற்படுத்தினார். மருணீக்கியார் தமக்கு தெரிந்த சமண சமய மந்திரங்களால் நோய் தீர்க்க முயன்றார். ஆனால், நோய் மேன்மேலும் தீவிரமடைந்தது. வேறு வழியின்றி தமது தமக்கையாரிடம் நோய் தீர்க்க வழி கோரினார். திலகவதியார் சிவத்தொண்டு புரிந்தால் நோய் நீ்ங்கப் பெறுவாய் எனக் கூறினார். மருணீக்கியாரும் வீரட்டானேசுவரர் திருக்கோயிலை வலம் வந்து சிவனை வண்ங்கினார். அவருக்கு மெய்யுணர்ச்சி தோன்றி சூலை நோய் ஒழியவும், உலகம் உய்யவும் திருப்பதிகம் பாடினார். உடனே அவரது சூலை நோய் மறைந்தது. இதற்கு என்ன கைமாறு செய்வேன் என உணர்ச்சி பொங்க சிவனை வணங்கினார். அப்போது, தீந்தமிழ் பதிகத்தை பாடிய நீ திருநாவுக்கரசர் எனப் போற்றப்படுவாய் என அசரீரீ எழுந்தது. மகிழ்ச்சியடைந்த நாவக்கரசர் சைவத் தொண்டை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானித்தார். இதனை அறிந்த சமணர்கள் சமண சமயத்தில் பற்றுள்ள பல்லவ மன்னனிடம் கலகம் புரிந்தனர். பல்லவ மன்னனின் சூழ்ச்சியால் நாவக்கரசரை கொல்ல முயற்சிகள் நடந்தன. கொதிக்கும் சுண்ணாம்பு கால்வாயில் போடுதல், நஞ்சளித்தல், மதயானையை ஏவி விடுதல் என எல்லா வகையிலும் கொல்ல முயன்றனர். நாவுக்கரசர், சிவனை பணிந்து திருப்பதிகம் பாடினார். இதனால் ஓரு தீ்ங்கும் ஏற்படவில்லை. இறுதியில் கல்லில் நாவக்கரசரை கட்டி கடலில் வீசினர். ஈசனின் அருளால் கல் தோணி போல் மிதந்து கரை சேர்ந்தது. ஈசனது திருவருளை கண்டு மெய்யறிவு பெற்ற மன்னன், சமண சமயத்தை விட்டு நீ்ங்கி சைவ சமயத்திற்கு மீண்டான். திருநாவுக்கரசர் இன்னிசை தமிழ் பாடல்களாலும், உழவாரத் திருப்பணி எனக் கூறப்படுகின்ற கோயிலை தூய்மைபடுத்தும் திருப்பணிகள் புரிந்து தமிழையம் இசையையும் வளர்த்து வந்தார். திருஞானசம்பந்தரை சீர்காழியில் சந்தித்து வண்கினார். ஞானசம்பந்தர் அன்பின் மிகுதியால் அவரை "அப்பர்" என அழைத்து சிறப்பித்தார். இருவரும் சேர்ந்து பல திருத்தலங்கள் சென்று தேவாரம் பாடினர். திருமறைக்காடு கோயிலின் கதவு திறக்கப்படாமல் அடைத்து வைத்திருப்பதை அறிந்து திருப்பதிகம் பாடி ஈசனருளால் கதவை திறப்பித்தனர். பின்னர் ஞானசம்பந்தர் சமணர்களால் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மதுரையை சைவ நெறிக்கு மீட்க மதுரை சென்றார். திருநாவுக்கரசர் தமது திருத்தொண்டை தொடர்ந்து வந்தார், தி்ங்களூர் என்ற ஊரில் தமது பிள்ளை இறந்ததையம் மறைத்து திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு விருந்தளித்த அப்பூதியடிகள் என்ற அடியாரின் துன்பத்தை போக்க தி்ங்களூர்ப்பெருமானை தொழுது மகனை உயிர்ப்பிக்க திருப்பதிகம் பாடினார். ஈசனருளால் அப்பூதியடிகளின் மகன் உயிர்ப்பெற்று எழுந்தான். சிவத்தொண்டின் சிறப்பினையும், பரமனது திருவருளையும் தி்ங்களூரே கொண்டாடியது. பின்னர் பல திருத்தலம் சென்ற திருநாவுக்கரசர் கயிலை மலைப்பயணத்தை தொட்கினார். உடலும் காலும் சோர்ந்து நடக்க முடியாத போதும் உள்ளம் தளராமல் உருண்டும் புரண்டும் தவழ்ந்தும் சென்றார். ஒரு வேதியர் வடிவில் தோன்றிய பரமசிவன் கயிலை மலையை காண்பது மனிதரால் இயலாது, மீண்டும் வந்த வழி செல்க என்றார். அதற்கு திருநாவுக்கரசர், கயிலையை காணாமல் திரும்ப மாட்டேன் என்றார். அப்போது கயிலைநாதன் கயிலைக்காட்சியை திருவையாற்றில் காண்பாயாக என்றருளிச் செய்து திருக்குளத்தில் முழ்குமாறு கூறி மறைந்தார். பரமனின் அருளால் உடல் நலம் பெற்ற நாவரசர் திருக்குளத்தில் முழ்கிய போது, திருவையாற்று திருக்குளத்திலே எழுந்தார். அங்கு பராசக்தி, பிரம்மன், விஷ்ணு, பிள்ளையார், முருகன் முதலான தேவர்கள் போற்றிப் பணியும் பரமேசுவரன் எழுந்தருளியிருக்கும் கயிலைக் காட்சியை கண்டு களித்தார். பின் திருநாவுக்கரசர் திருப்புகலூர் அடைந்து தேவாரம் பாடி உழவாரப் பணி மேற்கொண்டு வந்தார். பரமனை அடைய வேண்டும் என்று உணர்ந்து திருப்புகலூர் நாதனிடம் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தொழுது பாடினார். பாடி முடித்த அளவில் நாவரசர் மறைந்து இறைவனோடு கலந்தார்.
திருமூலர்
சிவஞான முனிவரான இவர் அகத்தியரை காணும் பொருட்டு தென்னகம் வந்தடைந்தார். அப்போது, மாடுமேய்க்கும் மூலன் என்ற இடையன் இறந்து கிடப்பதையும் மாடுகள் அவன் உடலைக் கண்டு அழுவதையம் கண்டார். பசுக்களின் துயர் தீர்க்க அட்டமா சித்திகளின் ஒன்றான கூடுவிட்டு கூடு பாய்ந்து மூலன் உடல் புகுந்தார். தன் உடலை பாதுகாப்பாக வைத்தார். பின்னர் பசுக்கள் தத்தமது வீட்டினை அடைந்ததும் தமது பழைய உடலுக்கு திரும்ப முற்பட்டார். ஆனால், பழைய உடல் மறைந்து போயிருந்தது. இது இறைவனின் திருவிளையாடல் என்றெண்ணி திருவாடுதுறை சென்று அங்கு அரசமரத்தடியில் அமர்ந்து, ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களை திருமந்திரம் என்று நூலாக அருளிச் செய்தார். இவ்வாறு பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்து சிவலோகம் அடைந்தார்.
நமிநந்தியடிகள்
இவர் நாள்தோறும் திருக்கோயிலில் திருவிளக்கேற்றும் திருத்தொண்டினை செய்து வந்தார். ஒரு நாள் சமணர்களின் இடையூரால் எண்ணெய் வாங்க முடியாமல் போனது. சிவபெருமானின் அருளால் தண்ணீரிலேயே விளக்கேற்றினார். திருவாரூரில் பிறந்தவர் எல்லாம் சிவகணங்களாக திருக்காட்சிகண்டார். பல்லாண்டு காலம் சிவத்தொண்டு புரிந்து சிவபதம் அடைந்தார்.
நரசிங்க முனையர்
இவர் சுந்தரரை வளர்ப்பு மகனாகக் கொண்டு, வளர்ப்புத் தந்தையாகும் பெருமை பெற்றார். இவர் அடியார்த் திருப்பணி பல செய்து மீண்டும் பிறவா நிலை பெற்றார்.
நின்றசீர் நெடுமாறன்
திருஞானசம்பந்தர் தந்த திருநீற்றால் சுரம் நீ்ங்கி, அவர் திருவாக்கால் கூன் நிமிரப்பெற்று சைவரானார். இவரது மற்றொரு பெயர் கூன்பாண்டியன்.
நேச நாயனார்
இவர் முனிவர்கள், சாதுக்கள், தொண்டர்கள், சந்நியாசிகள் என இறைவனை வழிபடும் அடியார்கசளுக்கு உடைகளை தானமாக வழங்கும் திருத்தொண்டினை புர்ந்து வந்தார். நெசவாளர் குலத்திற்கு பெருமையும், புகழும் உண்டாக்கிய நேசநாயனார் சிவலோகம் சென்று பேரின்பப் பெருவாழ்வு அடைந்தார்.
புகழ்சோழன்
இவர் சிவனடியார்களிடம் பெரு மதிப்பும் மரியாதையும் கொண்டு வணங்கிப் போற்றினார். இவரது சோழப்படை அதிகன் எனும் அரசனிடம் போரிட்டு வெற்றி கண்டது. அப்போது போரில் இறந்த வீரர் ஒருவரின் தலையில் சடைமுடி இருப்பதைப் புகழச்சோழர் கண்டார். சிவனடியார் இறப்பதற்கு காரணமாக இருந்து விட்டதை எண்ணி வருந்தினார். தீ வளர்த்து இறந்த வீரனை போற்றி நெருப்பில் புகுந்து சிவலோகம் சேர்ந்தார்.
புகழ்த்துணை நாயனார்
இவர் சிவபெருமானின் திருவருளால் நாள்தோறும் கோயில் திருப்படியிலே ஒரு தங்க காசினை பெற்றார். இதன் மூலம் திருக்கோயில் திருப்பணிகளை சிறப்புன் நடத்தினார். வறட்சியின் காரணமாக பசியால் வாடிய புத்தூர் மக்களுக்கு அன்னதானமளித்தார். பல காலம் திருத்தொண்டு புரிந்து சிவபதம் அடைந்தார்.
பூசலார்
இவர் திருக்கோயில் கட்டுவதற்கு தேவையான செல்வம் இல்லாததால் மனத்தினாலே திருக்கோயில் கட்டினார். அதற்கு கும்பாபிஷேக நாளும் குறித்தார். இவரது பக்திக்கு இணங்கிய ஈசன், அதே நாளில் கும்பாபிஷேகம் குறித்து வைத்திருந்த பல்லவ மன்னனின் கனவில் தோன்றி வேறு நாளில் கும்பாபிஷேகத்தை நடத்துமாறு அருளிச்செய்தார். மன்னனும் பூசலாரது பக்தியின் திறத்தை வியந்து, அவரை கண்டு பணிந்து போற்றினான். பூசாலருக்கு பெருஞ்செல்வம் அளித்து மனக்கோயிலை புறக்கோவிலாக கட்டுமாறு பணித்தான். பூசலாரும் திருநின்றவூரில் திருக்கோயில் அமைத்து முக்தியடைந்தார்.
பெருமிழலைக் குறும்பர்
இவர் அடியார்களுக்குப் பணிவிடை செய்து அன்னமிட்டு பொன் பொருள் கொடுத்து உதவும் திருத்தொண்டினை புரிந்து வாழ்ந்தார். இவர் அட்டமா சித்திகளில் ஒன்றான தொலை தூரத்தில் நடப்பவற்றை, அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றார். சுந்தரர் முக்தியடைந்து வெள்ளை யானை மீது ஏறி சிவலோகம் செல்லும் போது தமது ஆற்றலால் உணர்ந்த பெருமிழலைக் குறும்பர் தானும் ஆளுடை நம்பியோடு செல்ல விரும்பினார். யோக நிலையில் ஒன்றி உயிரை மேல் நோக்கிச் செலுத்தினார். வானத்தில் சென்று கொண்டிருந்த சுந்தரரை வலம் வந்து வண்கி சிவலோகம் சேர்ந்து முக்தியடைந்தார்.
மங்கையர்க்கரசியார்
இவர் கூன் பாண்டியனின் மனைவியாவார். இவர் திருஞானசம்பந்தரை வரவழைத்துத் தமது கணவரையும் நாட்டையும் சைவமாக்கினார்.
மானக்கஞ்சாற நாயனார்
இவரது மகளின் திருமணத்தன்று சிவபெருமான் தவமுனிவராக மணவீட்டிற்கு வந்தார். மணமக்களை வாழ்த்திய முனிவர் அவரது கூந்தலை பஞ்சவடிக்கு (பஞ்சவடி - முடியால் செய்யப்படும் கயிறு) வழங்குமாறு கேட்டார். மானக்கஞ்சாறர் மகிழ்ச்சியுடன் கூந்தலை அரிந்து தவமுனிவருக்கு அளித்தார். முனிவர் மறைந்து போனார். மணமகளின் கூந்தல் முன்னைவிட பலமடங்கு புதுப்பொலிவுடன் நீண்டு வளர்ந்தது. அனைவரும் சிவபெருமானின் திருவிளையாடலை எண்ணி ஆனந்தம் அடைந்தனர். அடியவர் தொண்டினை தொடர்ந்து நிறைவேற்றிய மானக்கஞ்சாறர் சிவலோகம் சேர்ந்து சிவபதம் அடைந்தார்.
முனையடுவார் நாயனார்
இவர் கூலிக்கு பல மன்னர்களுக்காக போர் புரிந்து அதில் கிடைத்த பெரு்செல்வத்தைக் கொண்டு ஆலயத் திருப்பணியும் அடியார்த் திருப்பணியும் செய்து சிறப்புடன் வாழ்ந்து சிவபதம் அடைந்தார்.
முருக நாயனார்
இவர் பூவால் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டது மட்டுமின்றி, பூவால் பலவிதமாக இறைவனின் திருவுருவங்களை அலங்காரம் செய்து இறைவனுக்கு பெருமை சேர்த்தார். இவர் திருஞானசம்பந்தரின் திருமணத்தில் கலந்து கொண்டு ஞான சம்பந்தருடன் முக்தியடைந்தார்.
மூர்க்க நாயனார்
இவர் சூதாட்டத்தின் மூலம் செல்வம் ஈட்டி அடியார்களுக்கு அன்னதானமளித்தார். இவர் அடியார்களின் பசிப்பிணியை நீக்கும் தொண்டினை தொடர்ந்து நிறைவேற்றி முக்தியடைந்தார்.
மூர்த்தி நாயனார்
இவர் மதுரை சொக்கநாதருக்கு அபிஷேகத்திற்கும், சந்தனக் காப்பிற்கும் சந்தனம் அரைத்துக் கொடுக்கும் திருத்தொண்டினை புரிந்து வந்தார். சமணர்களால் இவரது தொண்டு தடைப்பட்ட போது சந்தனக் கல்லில் தன் முழுங்கையையே வைத்துத் தேய்க்கலானார். அசரீரீ முலமாக நாயனாரை தடுத்த ஈசன், அடுத்த மன்னனாக நீயே அரசுரிமை பெறுவாய் என அருள் புரிந்தார். அவரது முழங்கை முற்றிலும் நலமடைந்தது. யானையின் மூலம் மன்னனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாயனார், முனிவர் கோலத்துடன் தவநெறியில் ஆட்சி புரிந்தார். பல்லாண்டு காலம் ஆட்சி புரிந்து சிவலோகம் சேர்ந்து சிவகணமானார்.
மெய்ப்பொருள் நாயனார்
இவரைக் கொல்லவந்த பகையரசன் சிவனடியார் வேடம் பூண்டு வந்தான். இதனை உணர்ந்த மெய்ப்பொருள் நாயனார் மகிழ்ச்சியுடன் தனது உயிரை அளித்தார். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு முக்தியடைந்தார்.
வாயிலார் நாயனார்
இவர் எப்பொழுதும் சிவநினைவில் ஆழ்ந்திருந்து உள்ளத்தில் கோயில்கட்டி அகப்பூஜை செய்து வாழ்ந்தார். எல்லோராலும் வாயிலார் என்று புகழப்பட்டார். தவம் செய்யம் முனிவரை போன்று ஞான பூஜை புரிந்து வந்த வாயிலார் முக்தியடைந்து பிறவாநிலை அடைந்தார்.
விறன்மிண்ட நாயனார்
இவர் திருவாரூர் திருத்தலத்தில் ஆலயத் திருப்பணியும், அடியார்த் திருத்தொண்டும் புரிந்து வந்தார். ஒரு நாள் அங்கு வந்த சுந்தரர் அங்கிருந்த அடியார்களை காணாமலும், வணங்காமலும் சென்றார். இச்செயலைக் கண்ட விறண்மிண்டர் சுந்தரரின் செயலானது திருத்தொண்டர் தன்மைக்கு புறம்பானது எனக் குறை கூறினார். இதற்கு சுந்தரர் தாம் அடியார்களை புறக்கணிப்பதில்லை என்றும், உலகில் உள்ள சிவனடியார்கசுக்குத் தொண்டன் என்று கூறும்வகையில் அடியார்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு அடியேன் என திருத்தொண்டத்தொகை பாடினார். விறண்மிண்டரும் சுந்தரரும் ஒருவரை ஒருவர் வணங்கி போற்றிப் பணிந்தனர். பெரிய புராணத்துக்கு வித்தான திருத்தொண்டத்தொகை உருவாக காரணமாக இருந்த விறண்மிண்டர் திருத்தொண்டுகள் பல புரிந்து சிவபதம் அடைந்தார்.
HTML Comment Box is loading comments...


முதல் பக்கம்

© www.adiyaar.com