ஆண்டாள்
இவர் பூதேவியின் அம்சமாக அவதரித்தவர். பெரியாழ்வாரின் நந்தவனத்தில் திருத்துழாய்ச் செடி ஒன்றின் கீழ் தோன்றினார். இவரை பெரியாழ்வார் ஏற்று "கோதை" என்று திருநாமம் சூட்டி வளர்த்து வந்தார். திருவரங்கன்பால் பற்று கொண்டு திருவரங்கனையே திருமணஞ் செய்து கொள்ள விரும்பினார்.. பெருமாளுக்காக பெரியாழ்வார் தொடுத்து வைத்திருந்த மாலையினை தானே அணிந்து, கண்ணாடியில் காண்பது வழக்கம். ஒரு சமயம் இதை கண்ட பெரியாழ்வார் கோதையினை பெரிதுங் கடிந்து கொண்டு வேறு ஒரு மாலையினை புனைந்து திருமாலுக்கு சாற்றினார். அன்றிரவே, பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமான், ஆண்டாள் சூடிய மாலையே தமக்கு வேண்டும் என கூறினார். ஆண்டாள் திருமாலிடத்தில் காதல் கொண்டு அருளிய திவ்ய பிரபந்தங்கள் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியுமாகும். ஒரு நாள், திருவரங்கன் ஆழ்வாரின் கனவில் தோன்றி, கோதையுடன் தன்பால் வர வேண்டும் என பகர்ந்து, பல்லக்கு, குடை, சாமரம் போன்றவற்றை அனுப்பினார். ஆண்டாள் பல்லக்கில் அமர்ந்து திருவரங்கம் அடைந்து பெருமானது திருமேனியில் இரண்டறக் கலந்தார்.
குலசேகர ஆழ்வார்
இவர் மலையாள நாட்டில் கொல்லி நகரில் அரச குலத்தில் அவதரித்தார். தமது போர் திறத்தால் பாண்டிய சோழ நாடுகளை வெற்றிக்கொண்டார். இவர் பெருமாளின் அவதாரமான இராம பிரானிடம் பெரும் பக்தி கொண்டார். இதனால் இவர் குலசேகரப்பெருமாள் என்று அழைக்கப்பட்டார். தமது அரசப் பதவியை வெறுத்து, திருமாலை வழிபட்டு பாசுரங்கள் பல இயற்றினார். இவர் திருவேங்கடமுடையானை மங்களாசாசனம் செய்யும் போது, தாம் திருமால் முன்பு இருக்கும் திருப்படியாய் கிடந்து பவள வாயை காண வேண்டும் என பாடியருளினார். இதனாலேயே விஷ்ணு ஆலயங்களில் பெருமானுக்கு முன் அமைந்துள்ள படி "குலசேகரன்படி" என அழைக்கப்படுகிறது. இவர் 105 பாசுரங்கள் அடங்கிய பெருமாள் திருமொழியை அருளியுள்ளார்.
திருப்பாணாழ்வார்
ஒரு நெல்கதிரில் இருந்து அவதரித்த இவரை பாணன் ஒருவர் வளர்த்து வந்தார். காவிரிக் கரையில் வீணையை கையிலேந்தி திருமாலது புகழினை எப்பொழுதும் பாடி வந்ததால் "திருப்பாணாழ்வார்" என அழைக்கப்படுகிறார். திருவரங்கனது நியமனப்படி இவரை லோகசாரங்க முனிவர் தமது தோளில் ஏற்று பெருமானது திருமுன் சேர்த்தார். திருமாலது திருவடி முதல் திருமுகம் வரை போற்றி பாசுரங்கள் இயற்றி பெருமானுடைய திருவடிகளில் ஐக்கியமானார். இவர் திருவேங்கடத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருமங்கையாழ்வார்
இவர் சோழ மன்னனின் போர்த் தலைவராக பணி செய்து பல போர்களில் வெற்றி பெற்றதால் பரகாலன் எனப் பெயர் பெற்றார். இவர் திருமங்கை என்ற நகரை ஆண்டு வந்ததால் திருமங்கை மன்னன் என்ற திருநாமமும் ஏற்பட்டது. இவர் குமுதவல்லி என்ற பெண்ணை மணப்பதற்காக வைணவ மதத்தை ஏற்று, குமுதவல்லியை மணந்தார். குமுதவல்லியின் நிபந்தனையை ஏற்று, ஓர் ஆண்டு காலம் நாள் தோறும், ஆயிரம் வைணவர்களுக்கு அன்னம் அளித்து வரலானார். இந்நிலையில் இவரது பொருள் வளம் குறைய ஆரம்பித்ததால், களவு செய்து பொருள் சேர்க்கலானார். ஒரு நாள், திருமால் திருமணக்கோலத்துடன், மனித வடிவில் சீர்வரிசைகளுடன் இவர் களவு செய்யும் வழியில் சென்றார். இவரை தடுத்து நிறுத்திய ஆழ்வார், பெருமானது ஆபரணங்களையும், திருமண சீர்களையும் பறித்து கொண்டார். ஆனால், மணப்பெண்ணின் கால் விரலில் உள்ள மோதிரத்தை எவ்வளவோ முயன்றும் கழற்ற இயலவில்லை. இதனால் மனங்கலங்கி, மனித வடிவில் இருந்த இறைவனை நோக்கி, "நீ ஏதோ மந்திரம் செய்தாய், அதை எனக்கு ஓத வேண்டும்" என கேட்டுக் கொண்டார். இவரது வலச்செவியில் திருமந்திரத்தை ஓதினார். திருமாலின் திவ்ய கடாக்ஷத்தால், மெய் ஞானம் பெற்றார். தலந்தோறும் சென்று திருமாலை போற்றி பாசுரங்கள் பாடி வந்தார். பின்னர் திருவரங்கத்து திருக்கோயிலை புதுப்பித்து, மதில் சுவர்களை எழுப்பினார். இவர் திருவரங்கனிடம், ஒவ்வோர் ஆண்டும், மார்கழி மாதம் ஏகாதசி உற்சவத்தின் போது, நம்மாழ்வாரது திருமொழியினை செவியில் ஏற்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அதன்படியே, ஆண்டு தோறும், பல வைணவத் தலத்தில் மார்கழில் மாதத்தில், பெரிய திருநாள் உற்சவம் நடைபெற்று வருகிறது. திருமங்கையாழ்வார் அருளியவை: பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்), திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்), திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்) மற்றும் திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்.
திருமழிசையாழ்வார்
இவர் தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை என்னும் ஊரில் பிறந்தார். திருவல்லிக்கேணி அடைந்து நெடுங்காலம் தவ யோகத்தில் இருந்தார். பல சமயத்தை பின்பற்றி இறுதியில் வைணவமே சிறந்தது என்று உணர்ந்து வைணவரானார். பிற சமயவாதிகளிடம் வாதப் போரில் வெற்றிக் கொண்டார். இவரது சீடர் கணிக்கண்ணன். கணிக்கண்ணன் அவர்கள் கோவிலில் தொண்டு புரிந்து வந்த மூதாட்டியின் இறைத் தொண்டினை கண்டு அவருக்கு இளம் பருவமடைய செய்தார். இதனை அறிந்த மன்னன், தனக்கும் இளமை வழங்குமாறு வேண்டினார். இதற்கு கணிக்கண்ணன் மறுக்கவே, சினம் கொண்ட மன்னன் அவரை நாடு கடத்தினார். இதனை அறிந்த திருமழிசையாவார், தானும் உடன் வருவதாக கூறி, கோவிலை அடைந்து இறைவனை நோக்கி, கணிக்கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா துணிவுடைய செந்நாப்புலவன் யான் சொல்லுகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் என்று கூற, இறைவனும் தன் பாம்புப்படுக்கையை சுருட்டிக் கொண்டு, இவர்களுடன் புறப்பட்டதாகவும், இதனால் ஊர் பொலிவிழந்து காணப்பட்டதாகவும், இதனை அறிந்த மன்னன், ஆழ்வாரிடம் மன்னிப்பு கூறி, மீண்டும் நாட்டிற்கு வருமாறு வேண்ட, ஆழ்வாரும் நாட்டை அடைந்து, திருமாலை பைந்நாகப்பாய் விரித்து தங்கும்படி கூற, இறைவனும் தங்கியதாகவும் அறியப்படுகிறது. இதனால், திருமால் "சொன்னவண்ணம் செய்த பெருமாள்" என அழைக்கப்படுகின்றார். இவர் பாடிய பாடல்கள் திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி முதலியன.
தொண்டரடிப்பொடியாழ்வார்
இவர் மண்டங்குடியில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர். இவரது திருநாமம் விப்ரநாராயணன் என்பதாகும். அடியாரின் மேன்மையை உணர்ந்து, இவர் தமது திருப்பெயரை "தொண்டரடிபொடி" என கூறிக் கொண்டார். இவர் ஸ்ரீரங்கத்தில் பெரிய நந்தவனம் அமைத்து திருவரங்கத்து இறைவனுக்கு நாள்தோறும் திருமாலை அணிவித்து வந்தார். இவர் அருளிச் செய்தது திருப்பள்ளியெழுச்சி - 10 பாசுரங்கள், திருமாலை - 45 பாசுரங்கள். இவரது பாசுரங்கள் திருவரங்கனது மேன்மையையும், அடியார்களது பெருமையையும் விளக்குவதாக அமைந்துள்ளது.
நம்மாழ்வார்
இவர் தென்னாட்டில் திருக்குருகூரில் அவதரித்தார். இவர் பிறந்தது தொடங்கி தாய்ப்பால் உண்பது, அழுவது போன்றவற்றை தவிர்த்து உலக நடைக்கு மாறாக வளர்ந்து வந்தார். கர்பத்தில் இருக்கும் தறுவாயில் சிசுவின் அறிவை மறைப்பது "சடம்" என்ற வாயு. ஆனால், இந்த வாயுவை மேலிடாதவாறு நம்மாழ்வார் செய்து விட்டபடியால், சடகோபன் என அழைக்கப்பெற்றார். பின்பு, ஒரு புளிய மரத்தில் யோக நிலையில் அமர்ந்தார். வடநாட்டு யாத்திரை சென்றிருந்த மதுரகவியாழ்வார் வானில் ஒரு சோதி ஒளிர்வதை கண்டு அதைப்பின் தொடர்ந்து வந்த திருக்குருகூர் அடைந்தார். அங்கு புளிய மரத்தில் யோக நிலையில் இருந்த நம்மாழ்வாரை கண்டு, இவர் பேச வல்லவரோ என்று எண்ணி, "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் அது எத்தைத் தின்று எங்கே இருக்கும்?" என வினவினார். ஆழ்வார், "அத்தைத் தின்று அங்கேயே இருக்கும்" என விடை பகர்ந்தார். அதாவது, மதுரகவி "அறிவில்லாத உடலோடு அறிவு மயமான ஆத்மா தொடர்பு கொண்டால், எதை அனுபவிக்கும் எங்கே கிடக்கும்" என்பதாகும். அதற்கு ஆழ்வார், "அந்த ஆத்மா அந்த உடம்பிலேயே உறைந்து இன்ப துன்பங்களை அனுபவித்து வரும்" என்றார். நம்மாழ்வார் அருளிய பிரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழியாகும்.
பூதத்தாழ்வார்
இவர் மாமல்லபுரத்தில் அவதரித்தவர். இவரது பாடல்களில் பூதம் என்ற பதம் வருமாறு பாடியதால் பூதத்தாழ்வார் என அழைக்கப்பட்டார். இவர் திருக்கோவிலூரில் இடைகழியில் பொய்கையாழ்வார், பேயாழ்வாருடன் மழைக்காக ஒதுங்கி நின்ற போது, திருமாலும் அவர்களுடன் ஒதுங்கி நின்றதை அறிந்து, இவர் அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா நன்புருகி ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான் என்ற பாசுரத்தை இயற்றினார். இவர் திருமாலின் மீது பாடிய பாசுரங்கள் இரண்டாம் திருவந்தாதி என அழைக்கப்படுகின்றது.
பெரியாழ்வார்
இவர் பாண்டி நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அந்தணர் மரபில் அவதரித்தார். இவரை கருடாழ்வாரின் அவதாரமாக கருதுவர். இவர் திருமாலிடம் பேரன்பு கொண்டு, சர்வ காலமும் நினைத்து கொண்டு இருந்ததால் "விஷ்ணு சித்தர்" என்ற திருநாமம் பெற்றார். பெரிய நந்தவனம் அமைத்து அதில் வளரும் பலவகை மலரினை கொண்டு திருமாலை அமைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்பெருமான் வடபத்திரசாயிக்கு தினந்தோறும் திருமாலை அணிவிக்கும் தொண்டு செய்து வந்தார். பாண்டிய மன்னன் கூட்டிய சபையில் ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள் என்று உரையாடி யாவராலும் பாராட்ட பெற்றார். மன்னன் இவரை யானை மீதேற்றி ஊர்வலமாக அழைத்து செல்லும் போது, ஸ்ரீமந் நாராயணன் கருடாரூடனாய் காட்சி அளித்தார். அப்போது, "பல்லாண்டு பல்லாண்டு" எனத் தொடங்கும் "திருப்பல்லாண்டு" என்ற பாசுரத்தை பாடியருளினார். இவர் கிருஷ்ணாவதாரத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு, தம்மை யசோதையாகவே கருதி, கண்ண பிரானுடைய பிள்ளை பருவத்தை அனுபவித்து வந்தார். கண்ணனை தமது பிள்ளையாக விளித்து பல பாசுரங்களை பாடியுள்ளார். தனது நந்தவனத்தில் ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்து கோதை என்று பெயர் சூட்டி வளர்த்தார். திருமாலின் கட்டளைப்படி கோதையை திருவரங்கத்தில் சேர்பிக்க, ஆண்டாள் இறைவனிடம் இரண்டற கலந்தார். இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் திருப்பல்லாண்டு 12 பாசுரங்கள், பெரியார் திருமொழி 451 பாசுரங்கள் கொண்ட 44 திருப்பதிகங்கள்.
பேயாழ்வார்
இவர் சென்னையிலுள்ள மயிலாப்பூரில் அவதரித்தவர். இவர் திருமாலின் மீது பக்தி பூண்டு பக்திப் பரவசத்தால் அழுது, சிரித்து பேய் பிடித்தவர் போல் இறைவனை வழிபட்டதால் பேயாழ்வார் என அழைக்கப்பட்டார். இவர் திருமாலின் திருவுருவத்தை கண்டு மகிழ்ந்து, திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும் பொன்னாழிக் கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன் பால் இன்று என்ற பாசுரத்தை அருளினார். இவர் திருமாலின் மீது பாடிய பாசுரங்கள் மூன்றாம் திருவந்தாதி என அழைக்கப்படுகின்றது.
பொய்கையாழ்வார்
இவர் காஞ்சிபுரத்தில் பொய்கை ஒன்றில் தாமரை மலரில் அவதரித்தார். இதனால் பொய்கை ஆழ்வார் என அழைக்கப்பட்டார். இவர் திருமாலின் திருச்சங்கான பாஞ்சசன்யத்தின் அவதாரமாக கருதப்படுகிறார். திருக்கோவிலூரில் மழைக்காக ஒரு இல்லத்தின் இடைக்கழியில் இவர் ஒதுங்கி நின்றார். அப்போது, பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் இவருடன் ஒதுங்கினர். ஒருவருனால் படுக்கலாம், இருவரானால் இருக்கலாம், மூவரானால் நிற்கலாம் என்று கூறியவாறு நின்றனர். அப்போது இருளில் நான்காவதாக ஒருவர் நிற்பதை அறிந்தனர். பிறகு, நான்காவதாக் நிற்பவர் திருமாலே என்று உணர்ந்து மூவரும் அழகிய பாசுரம் இயற்றினர். வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் செய்ய சுடரோழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை இட்ராழி நீங்குகவே என்று என்ற பாசுரத்தை அருளினார். இவர் திருமாலின் மீது பாடிய பாசுரங்கள் முதல் திருவந்தாதி என அழைக்கப்படுகின்றது.
மதுரகவி ஆழ்வார்
இவர் த்வாபரயுகத்தில் திருக்கோளூர் என்ற திருத்தலத்தில் அவதரித்தார். இவர் இனிமையான கவி பாடும் ஆற்றல் பெற்றவராதலால், மதுரகவி என புகழ் பெற்றார். இவர் ஒருசமயம் வடநாட்டிற்கு யாத்திரை சென்று அங்கிருந்த திவ்ய தேசங்களில் பெருமானை வணங்கி வரும் சமயம், வானில் தென் திசையில் பெருஞ் சோதி ஒன்றை கண்டார். பெரு வியப்புடன், அதனை பின் தொடர்ந்து சென்று திருக்குருகூர் அடைந்தார். அங்கு புளிய மரத்தின் நிழிலில் நம்மாழ்வாரை கண்டு அவரிடம் சீடரானார். நம்மாழ்வாரின் பாசுரங்களை ஓலையில் எழுதி வைத்தார். இவர் நம்மாழ்வாரை போற்றி, "கண்ணி நுண் சிறுத்தாம்பு" எனத் தொடங்கும் பாடலை பாடியருளினார்.
HTML Comment Box is loading comments...


முதல் பக்கம்

© www.adiyaar.com